காந்திநகர்: குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றவாளிகளை சிலர் இனிப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். இக்குற்றவாளிகளின் விடுதலைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
இக்குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் இருந்துள்ளனர். குழு இக்குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
பின்னணி
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பில்கிஸ் பானு எனும் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தை சார்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டவர்களை சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில அரசு விடுதலை செய்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பானு தனது வழக்கறிஞர் மூலம் “தயவுசெய்து விடுதலை உத்தரவை திரும்ப பெறுங்கள். அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனக்கான உரிமையை, சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரவேற்பு
குஜராத்தின் கோத்ரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு ஒன்று மேற்குறிப்பிட்ட குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் மாநில அரசு இந்த 11 குற்றவாளிகளை விடுவித்தது. இக்குழுவில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சி.கே.ராவோல்ஜி மற்றும் சுமன் சவுகான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த 11 குற்றவாளிகளுக்கு விஷ்வ இந்து பர்ஷித் அமைப்பினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறையிலிருந்து வரவேற்றனர்.
நிவாரணம்
இந்த விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு குழுவினர் அளித்த பேட்டியில் “குற்றவாளிகள் ஏற்கனவே போதுமான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம்” என இந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் இடம் பெற்றிருந்த குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்ள எத்தனை முறை குழு கூட்டப்பட்டது? பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டதா என்பது குறித்து குழு உறுப்பினர் எதுவும் கூறவில்லை.
கட்சி தாவிய எம்எல்ஏக்கள்
இக்குழுவில் இருந்த மற்றொரு உறுப்பினர் ராவோல்ஜி, “நாங்கள் நடைமுறையை பின்பற்றி விதிமுறைகளின்படிதான் செயல்பட்டோம்” என்று கூறியுள்ளார். இவர் கடந்த 2017ல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியவராவார். இவர் தொடக்கத்தில் பாஜகவில்தான் இருந்துள்ளார். இதன் பின்னர் 1996ல் வகேலாவுடன் சேர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு எம்எல்ஏவான சவுகான், கோத்ரா மாவட்டத்தில் உள்ள கலோலில் இருந்து முதல் முறையாக இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.
இவர் காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.