'அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம், நாம் வேடிக்கை பார்ப்போம்' – சீமான்

அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம். அதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் மீண்டும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க-வினர் கொடுத்த வழக்கில் வரும் 25 ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
image
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் ஆடை கட்டிய பாஜக. அதே போல பாஜக காவி ஆடை கட்டிய காங்கிரஸ்.
சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அவரையும், சாகும் வரை தங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன் என பிரிட்டிசாருக்கு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரையும், பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம்.
அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்து வருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?.
அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்னை பற்றி பேசுவோம். ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா? என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.