டெல்லி: உலக அளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) உலக நாடுகளில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பாக ஆய்வு செய்து, ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்த ஆய்வுக்காக, உலகின் முக்கிய 7,000 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில், , 6 பிராந்தியங்களில் உள்ள 103 நகரங்களில்தான் இந்த காற்று மாசு அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது, காற்றில் உள்ள நுண் துகள்கள் 2.5 அளவை விட குறைவானதாக இருக்க வேண்டும். இதைவிட அதிகமாக இருந்தால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பால் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்படுகிறது. இந்த காற்று மாசால் இதயம் அல்லது நுரையீரல் சார்ந்த நோய்கள், கடுமையான மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது.
இந்த காற்று மாசு (PM2.5) பாதிப்பால் சீனாவின் பெய்ஜிங்கில் 1,00,000 பேரில் சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 106 ஆக உள்ளது. கொல்கத்தாவில் இந்த பாதிப்பால் 99 பேர் உயிரிழக்கின்றனர். HEI வெளியிட்டுள்ள காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 20 இடங்களில் சீனாவின் 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் NO2 எனப்படும் ‘நைட்ரஜன் ஆக்ஸைடு’ அதிக அளவில் வெளியிடப்படும் நகரங்களின் பட்டியலில் சீனா அதிக நகரங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நகரங்கள் இந்த PM2.5 மற்றும் NO2 வெளியேற்றும் அளவுகளை கடுமையாக மீறியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனதவ கடந்த 2019ம் ஆண்டு ஆய்வின்படி, டெல்லியில் காற்றில் ஒரு கனமீட்டருக்கு PM2.5 அளவு 110 மைக்ரோகிராம்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளதைவிட சுமார் 22 மடங்கு அதிகமாகும். இதுவே கொல்கத்தாவை பொறுத்த அளவில் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 84 மைக்ரோகிராம் இருக்கிறது. , 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 29,900 பேர் இந்த காற்று மாசு பாதிப்பால் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.