புவனேஸ்வர்: ஒடிசாவில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஒடிசாவில் தொடர் மழை காரணமாக மகாநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மகாநதியில் வெள்ளம் தொடர்ந்து அபாய அளவுக்கு மேல் செல்வதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 237 கிராமங்களில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கின்றனர். இந்தப் பருவத்தில் முதல்முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தால் 10 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மகாநதியில் உள்ள ஹிராகுட் அணையின் உயரம் 630 அடியாக உள்ள நிலையில் அதன் நீர்மட்டம் 626.47 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6.24 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 6.81 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மகாநதியில் முண்டலி தடுப்பணைக்கு அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, குர்தா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளது.
மகாநதி படுகையில் உள்ள 10 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழையால் 1,366 கிராமங்கள் மற்றும் 9 நகரங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசாவின் வடகடலோர 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்துள்ளது.