சென்னை : நடிகர் கார்த்தியின் விருமன் படம் வெளியாகி தற்போது 6 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
கிராமத்து மண் மணம் மாறாமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் தந்து இந்தப் படம் வெளியாகியுள்ளது. திரைக்கதை மூலமே இந்தப் படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தின்மூலம் இணைந்த கார்த்தி -முத்தையா கூட்டணி ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை பூர்த்தியும் செய்துள்ளது.
கிராமத்துக் கதைக்களங்கள்
கிராமத்துக் கதைக்களங்களுக்கு கோலிவுட்டில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. என்னதான் வசதி வாய்ப்புகள் அதிகரித்து லக்சூரியஸ் வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டாலும் உறவுகளுக்காக ஏங்கும் மனநிலை அனைவரிடமும் காணப்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் விருமன் போன்ற படங்களின் வெற்றி.
உறவுகளின் முக்கியத்துவம்
கொம்பன் படத்தில் ஒற்றை ஆளாக கார்த்தியை சண்டியராக நடிக்க வைத்த இயக்குநர் முத்தையா இந்தப் படத்தில் மூன்று அண்ணன்களுக்கு தம்பியாக களமிறக்கியுள்ளார். சாதாரண அண்ணன் -தம்பி கதையைத்தான் அவர் கையில் எடுத்துள்ளார் என்றாலும் இந்தப் படத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தை அவர் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.
அண்ணன்களுக்காக போராட்டம்
படத்தில் தன்னுடைய அம்மாவின் ஆசைப்படி அண்ணன்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார் கார்த்தி. அதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தன்னுடைய அம்மாவின் சாவிற்கு காரணமாக இருந்த தன்னுடைய அப்பாவின் மனமாற்றத்திற்காக அவர் செய்யும் செயல்கள் இந்தப் படத்தின் கதைக்களமாக மாறியுள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம்
படத்தில் சரண்யா, அதிதி, வடிவுக்கரசி என பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் சூர்யா சொன்னதுபோல பெண்களை இந்தப் படத்தில் கொண்டாடியுள்ளது முத்தையாவின் வெற்றி. இத்தகைய சிறப்புகளை கொண்டுள்ள இந்தப் படம் கடந்த 6 நாட்களில் மட்டுமே 46 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டியுள்ளது.
சிறப்பான வசூல்வேட்டை
சென்னையில் கடந்த 6 நாட்களில் 1.8 கோடி ரூபாய் கலெக்ஷன் வசூலாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த விருமனுக்கு போட்டியாக இன்றைய தினம் தனுஷின் திருச்சிற்றம்பலம் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
திருச்சிற்றம்பலம் ரிலீஸ்
தனுஷின் கடந்த ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் ஆகிய படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியான சூழலில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே படத்தை பார்க்க திரையரங்குகளில் ரசிகர்கள் அலைமோதிய காட்சிகளையும் காண முடிந்தது.
விருமன் வசூலை பாதிக்குமா தனுஷ் படம்?
புக்கிங்குகளிலும் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் விருமன் படத்தின் வசூலை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.