இழப்புகளைக் கடந்துவர முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வில் வரும் காதல்களும் (?), என்றுமே தொடரும் நட்பும்தான் (!) இந்த ‘திருச்சிற்றம்பலம்’.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. மகன், அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குக் காரணம், அப்பாவின் அஜாக்கிரதையால் நேர்ந்த இரு இழப்புகள். பேசாத மகனுக்கும் பேரனுக்குமான பாலமாக தாத்தா இருக்க, தன் அப்பாவின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மகன், அவரோடு இணைந்தாரா என்பதையும் நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது என்பதையும் ஒரு ஃபீல் குட் டிராமாவாகச் சொல்கிறது ‘திருச்சிற்றம்பலம்’.
‘பழம்’ என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான். ‘பிரச்னையைக் கண்டால் விலகிப் போயிடணும்’ என்ற ‘நமக்கு எதுக்கு வம்பு’ ஜோன்தான் இதில் அவருக்கு! எனவே தன் ஆக்ஷன் அவதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பையனாக, கதையின் நாயகனாக மிளிர்கிறார். தனுஷின் ஆழமான நடிப்புக்குச் சவால் விடும் ரோலில் நித்யா மேனன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. தனுஷுக்கு பல்பு கொடுப்பது, பாரதிராஜாவுடன் சேர்ந்து அதகளம் செய்வது என படம் முழுக்கவே நிறைந்திருக்கிறார். ஷோபனா கதாபாத்திரத்தில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்கவே நினைக்கத் தோன்றாத அளவிற்கு இருக்கிறது நித்யாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்!
இதுவரை சீரியஸான எமோஷனல் நடிப்பை மட்டுமே காட்டியிருந்த பாரதிராஜா, இதில் தனது குறும்புப் பக்கங்களையும் காட்டியிருக்கிறார். கொஞ்சம் எமோஷன் இருந்தாலும் அவரின் ஹியூமரும் கலாய்ப்பும் நன்றாகவே வொர்க் அவுட்டாகி இருக்கிறது. சில மெசேஜ்களை அவர் மூலம் சொல்லிருப்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. மிடுக்கான போலீஸாக பிரகாஷ் ராஜ், வீட்டிலும் அதே மிடுக்குடனே இருக்கிறார். ஆனால், அதே சமயம் மனதிற்குள் இருக்கும் வலியைப் பிரமாதமாக வெளிக்காட்டியிருக்கிறார். “என்ன மன்னிக்கவே மாட்டியாடா?” என அவர் தனுஷிடம் கசிந்துருகும் காட்சி கலங்கடிக்கும் சென்டிமென்ட். இவர்கள் நால்வரும்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள்.
குறிப்பாக, இழப்புகளைக் கடந்து வர முடியாமல் தவிப்பது, குடும்பத்தில் பிரச்னை என்றால் ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்காமல் முடங்கிக்கொள்வது என நம் தமிழ்க் குடும்பங்கள் காலங்காலமாகச் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் படமும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் கோபமாக வெடித்து வெளிவரும் அந்தக் காட்சியில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என மூவருமே போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் வசனங்கள். “ஒரு வயசுல பாரத்தைச் சுமக்கிறது சுகம்; ஒரு வயசுல பாரமா இருக்கிறதும் சுகம்தான்” என்று பாரதிராஜா சொல்வது ஹைலைட்! திரைக்கதையோடு இணைந்திருக்கும் ஹியூமர் என்பதால் அது எங்குமே வலிந்து திணிக்கப்படவில்லை. அனிருத் இசையில் ‘மேகம் கருக்காதா’, ‘தாய்க் கிழவி’ பாடல்கள் திரையரங்கில் தாளம்போட வைக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன். அதனாலோ என்னவோ அனிருத்தின் பின்னணி இசையில் அவ்வப்போது இளையராஜாவும் எட்டிப் பார்க்கிறார். ஆங்காங்கே ‘வி.ஐ.பி’ படத்தின் பின்னணி இசையும் நினைவில் வந்து போகிறது.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை கூலாக்குகிறது. குறிப்பாக, ‘மேகம் கருக்காதா’ பாடலில் அவர் செய்திருக்கும் லைட்டிங் மாயாஜாலங்களில் ரசனை வழிந்தோடுகிறது. மூன்று தலைமுறை ஆண்கள் ஒரே வீட்டில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஜாக்கியின் கலை இயக்கம் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் கன கச்சிதம்.
முதல் பாதியில் ராஷி கண்ணா அட்டெண்டன்ஸ் போட, இரண்டாம் பாதி பிரியாபவானி சங்கருக்கு. பிரியாவுடன் ஒப்பிடும்போது ராஷிகண்ணாவுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் அதிகம். நன்றாகவும் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்ந்து, ஆங்காங்கே சில சென்டிமென்ட்களோடு யதார்த்தமாக முடிய, இரண்டாம் பாதியில் சினிமாத்தனம் நிறைய இடங்களில் எட்டிப் பார்க்கிறது.
ஒரு விபத்தைக் கொலை போல் சித்திரித்து, அதற்காக உறவுகளுக்குள் இவ்வளவு பெரிய விரிசல்கள் விழுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. நட்பா, காதலா விவாதத்தைப் படம் நெடுக தவிர்த்துவிட்டு, இறுதியில் அதையே கையில் எடுத்து க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பது பல பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. அதிலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை நோக்கித்தான் படம் நகரப் போகிறது, இதுதான் க்ளைமாக்ஸ் என்பதுவரை யூகிக்க முடிகிறது. ஸ்டன்ட் சில்வா வரும் போர்ஷன்களும் அழுத்தமில்லாத க்ளிஷே அல்லது சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன. இதனாலேயே படம் யதார்த்தமாகத் தொடங்கி டெம்ப்ளேட்டாக முடிந்த உணர்வு எட்டிப் பார்க்கிறது.
நித்யா மேனன், தனுஷின் நடிப்புக்காகவும், தமிழ் சினிமா சில மாதங்களாகக் கண்டுகொள்ளாத ஜானரான `ஃபீல் குட்’டில் ஒரு ஜாலியான என்டர்டெயினர் என்ற வகையிலும் இந்த `திருச்சிற்றம்பலம்’ நம் நெஞ்சில் நிறைகிறான்.