திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் உள்ளிட்ட பன்முக அடையாளங்களைக் கொண்டிருக்கும் எஸ்.ஜே சூர்யா, மாநாடு, டான் என அடுத்தடுத்து நடித்த படங்கள் ஹிட் அடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சிம்பு நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக புதிய உட்சத்தை எட்டியது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸிலும் இணைந்தது. இதனைப் படக்குழு, ஒன்றாக இணைந்து வெற்றியைக் கொண்டாடியது. வெங்கட் பிரபு மற்றும் சிம்புவுக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் பேசப்பட்டது.
அவரின் வித்தியாசமான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமா உலகின் கவனத்தை ஈர்த்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் தனக்கு பொருத்தமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் வந்த நியூ திரைப்படம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அந்தப் படம் எந்த ஓடிடி தளங்களுக்கும் விற்பனை செய்யப்படாத நிலையில், அதனை ரிலீஸ் செய்வது குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஜே சூர்யா, நியூ படம் அப்படியே தன்னிடம் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளார்.
எந்த ஓடிடி தளத்துக்கும் டிஜிட்டல் உரிமையைக் கொடுக்கவில்லை என கூறியிருக்கும் அவர், அதனை வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், படம் வெளியானபோது இருக்கும் காட்சிகள் பெரும்பாலும் எடிட் செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.” இப்போது நடிக்கும் படங்களால் எனக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், நியூ படத்தை இப்போது வெளியிட்டால் என் பெயர் கெட்டுப்போய்விடும். அதற்கேற்ப சில காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு, ஒரு நல்ல படமாக வேண்டும் என்றால் ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.