திருமா பிறந்தநாள் விழாவில் பாஜக-வை சீண்டிய ஸ்டாலின்… கூட்டணியைச் சமாளிக்கவா?! பின்னணி என்ன?

புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்வதற்கு முன்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, பா.ஜ.க-வுக்கு எதிராக எகிறிவிட்டுத்தான் சென்றார் ஸ்டாலின். இதன் பின்னணி குறித்து, தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம்.

திரௌபதி முர்முவுடன் ஸ்டாலின்

“கூட்டணியிலுள்ள கட்சியின் தலைவரின் பிறந்தநாள் விழாவுக்கு, ஆளுங்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. திருமா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டபோதுகூட, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட சிலரை அனுப்பலாம் என்றுதான் இருந்தார் ஸ்டாலின். ஆனால், தொடர்ந்து பா.ஜ.க குறித்த விவகாரங்களில் தி.மு.க மென்மையாக கையாள்கிறது என்ற பிம்பம் ஏற்பட்டது. டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கும்போது, பா.ஜ.க-வுடன் நெருக்கமாகவே தி.மு.க விரும்புகிறது என்ற எண்ணம் தோன்றும்.

அதனால்தான், டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக திருமா பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் மனம் குளிரவைக்க வேண்டுமென ஸ்டாலின் முடிவுசெய்தார். அதனால்தான் அவ்விழாவில் அவரே நேரடியாகக் கலந்துகொண்டார்.

ஜெகதீப் தன்கருடன் ஸ்டாலின்

ஜூ.வி இதழுக்குப் பேட்டியளித்த திருமா, `பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விடும்’ என்று கூறியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஸ்டாலின், `திருமாவளவன் கூறியதை முழுமையாக நான் ஏற்கிறேன். அவர் கூறியதுபோல் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க செய்துகொள்ளாது. டெல்லிக்குக் காவடிதூக்க ஒன்றும் செல்லவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசு உறவுகொள்ளுமே தவிர, தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு எந்த உறவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

டெல்லிக்கு முதல்வர் செல்வதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு, ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாக்களித்த பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரே இன்னமும் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறவில்லை. அவர்கள் இருவருக்கும் எதிராக வாக்களித்த தி.மு.க-வின் தலைவர் வாழ்த்துக்கூறச் செல்வதற்குப் பின்னால் பலே அரசியலும் ஒழிந்திருக்கிறது என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

டெல்லிக்கு பாஜக-வுடன் சமரசம் பேசச் செல்கிறார் என்றால், ஏன் பா.ஜ.க-வை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழும். பொதுவாகவே சமீப நாள்களாக பா.ஜ.க தமிழகத்தில் பதற்றமான அரசியலைச் செய்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறி தேசியக்கொடியை பா.ஜ.க-வினர் ஏற்றினர். ஆகஸ்ட் 13-ம் தேதி பொள்ளாச்சி – கோவை சாலையின் வழியாக கேரளாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரிகளை மடக்கி, தமிழ்நாட்டின் கனிமவளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதேதினத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, புரோடோகால் படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர்.

திருமா மணிவிழாவில் ஸ்டாலின்

தேவையின்றி அங்கு புகுந்த பா.ஜ.க-வினர் அமைச்சருடன் மல்லுக்கட்டியதுடன் செருப்பை அமைச்சரின் கார் மீது வீசியெறிந்தனர். ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலுள்ள பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குச் சென்ற கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பூட்டை உடைத்துச் சென்றனர். மேற்கண்ட விவகாரங்களில் உடனடியாக பா.ஜ.க-வினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்னை பெரிதான பின்னர்தான் நடவடிக்கை எடுத்தனர். இச்செயல் கூட்டணிக் கட்சியினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.

இப்படியான மனக்கசப்புடன் கூட்டணிக் கட்சிகள் இருக்கையில், மீண்டும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது இன்னும் கசப்பைக் கூட்டும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதனால்தான், இதற்கெல்லாம் மருந்திடும் விதமாகத்தான் ஸ்டாலின், திருமாவின் மணிவிழாவைப் பயன்படுத்திக் கொண்டார். இதேபோன்றுதான், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் சென்னை வந்தபோது அவருடன் அளவளாவினார் ஸ்டாலின். மோடி படத்தை ஒட்டிய பா.ஜ.க-வினரை விட்டுவிட்டு, அதன்மீது கறுப்பு மை பூசியவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. அப்போது அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கையே வெளியிட்டார்.

செஸ் ஒலிம்பியாடில் மோடி – ஸ்டாலின்

மற்றக் கூட்டணிக் கட்சிகள் மனதளவில் புழுங்கினர். அதனைச் சமாளிக்கும் விதமாகவே, செஸ் தொடக்க விழாவுக்கு மறுநாள் திருமா நடத்திய விருது வழங்கும் விழாவுக்கு வருகை புரிந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அறிவாலயத்துக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, அதேநாள், கேரளாவில் நடைபெற்ற மனோரமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று, கம்யூனிஸ்ட் கட்சியுண்டனானது கொள்கைக் கூட்டணி என்றும் அது உடையாது என்று மருந்துவைத்தார். ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வுடனோ, மத்திய அரசுடனோ நெருங்கும்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படும் வெறுப்பினை உடனே சில காரியங்களைச் செய்து கூட்டணி சிக்கல்களை சரி செய்வார் ஸ்டாலின். இதெல்லாம் அரசியலில் சாதாரணம்!” என்று முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.