ஒன்றிணைந்து செயல்பட ஓ.பி.எஸ் அழைப்பு: நிராகரித்து நீதிமன்றம் சென்றார் எடப்பாடி

Edappadi says no for OPS compromise

Getty Images

Edappadi says no for OPS compromise

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். அந்த செய்தியாளர் சந்திப்பில், எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் பொருந்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.

“அ.தி.மு.கவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்.ஜி.ஆர். 30 வருடங்கள் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இருக்கும்போது 15 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக மாற்றினார். 16 ஆண்டு காலம் முதலமைச்சராகவும் இருந்தார். அ.தி.மு.க. ஒன்றுபட்டு நின்றபோது, அதை வெல்ல எந்தக் கட்சியும் இல்லை என்ற நிலையை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். எங்களுக்குள் பிளவு ஏற்படும்போது தான் தி.மு.க ஆளும் சூழல் ஏற்பட்டது. இன்றும் அந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், எங்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையால் ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் எங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தியாகங்களைச் செய்தார்களோ, அதனை எண்ணி, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. தொண்டர்கள் இந்தக் கழகம் ஒன்றுபட வேண்டுமென நினைக்கிறார்கள். எந்தக் கசப்புகளையும் யாரும் மனதில் வைக்காமல் தூக்கியெறிய வேண்டும். கழகத்தின் ஒற்றுமையே பிரதானமாக இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதால் அ.தி.மு.க. உருவானது. அதற்குப் பிறகு, தி.மு.கவா, அ.தி.மு.கவா என்ற நிலை வந்தபோது, அதிமுகவே அதிக வாய்ப்பைப் பெற்றது. இப்போது தி.மு.க. ஆள்கிறது. எங்களைப் பொறுத்தவரை, உரிய எதிர்க்கட்சியாக, எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்.

எங்களோடு 50 ஆண்டு காலம் இணைந்து செயல்பட்ட தொண்டர்கள் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரோடு ஒற்றுமையாகப் பயணித்திருக்கிறோம். பல்வேறு ஜனநாயகக் கடமைகளை ஆற்றியிருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும்.

ஜெயலலிதா இறந்த பிறகு, தர்மயுத்தம் துவங்கப்பட்டு அதற்குப் பின்னால் கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்களின் கருத்துப்படி கூட்டுத் தலைமையாகச் செயல்படும் என்பதுதான் எங்கள் கொள்கையாக இருந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டோம். எந்தக் குறையும் அவரிடமும் இல்லை என்னிடமும் இல்லை. ஆக, இரட்டைத் தலைமை என்பது அல்ல, கூட்டுத் தலைமைதான் இந்த இயக்கத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றிகரமாக நடத்திச் சென்றது.

இந்த இணைப்பு தான் தொண்டர்களின் எண்ணமாகவும் பொதுமக்களின் எண்ணமாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த தகவல் வெளியானது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிமுக பொதுக்குழு

Getty Images

அதிமுக பொதுக்குழு

அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “எங்கள் எண்ணம், செயல் எல்லாம் இணைப்புதான். எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு ஏதும் இல்லை. இதற்கு முன்னால் நடந்தவை நடந்தவையாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இந்த இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்டவர்கள், ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், ஜெயலலிதா காலத்தில் தூணாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றிபெற வேண்டும்,” என்றார்.

அந்தப் பட்டியலில் சசிகலா, தினகரன் இருக்கிறார்களா என்று கேட்டபோது, “அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார் ஓ. பன்னீர்செல்வம். அவர்கள் பெயரைச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள் எனக் கேட்டபோது, “அதில் சின்னம்மாவும் (வி.கே. சசிகலா) இருக்கிறார், டிடிவி தினகரனும் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அ.தி.மு.க. விவகாரம் குறித்து நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் எடப்பாடி கே. பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருக்கிறார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியிருக்கிறது.

இதற்கிடையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பிடம் கொடுத்ததற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சாவியைக் கொடுத்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறிவிட்டது. எதிர் மனுதாரர்கள், சீல் வைத்த தமிழ்நாடு வருவாய்த் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதே நேரம், இரட்டை இலையை முடக்க வேண்டுமெனக் கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எடப்பாடி கே. பழனிச்சாமி சொல்வது என்ன?

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து சிறிது நேரத்திற்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“இந்த இயக்கத்தை சிலர் தங்கள் வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள். அதைத் தடுக்கும்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்திருந்தோம். 2017ல் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தோம். அதற்குப் பிறகு பொதுக் குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுசெய்யப்பட்டனர். சட்ட விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழு உறுப்பினர்களால் அல்லாமல் பொது உறுப்பினர்களால் தேர்வுசெய்ய வேண்டுமென விதிகளை மாற்றினோம். அந்த விதி மாற்றத்தை அடுத்து கூடுகின்ற பொதுக் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிமாற்றத்தை பொதுக் குழுவில் ஒப்புதல் பெறவில்லை. ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது காலாவதியாகிவிட்டது.

பொதுக் குழுவின் 2,663 பேர் தேர்வுசெய்தால் போதுமான என எங்களிடமிருந்து பிரிந்து நிற்பவர்கள் கேட்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் தேர்வுசெய்யப்பட்டவர்கள். யாரும் நியமன உறுப்பினர்கள் அல்ல. ஒற்றைத் தலைமை வேண்டுமென்ற கருத்தை பொதுமக்கள், தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள். ஜூன் 23ஆம் தேதி பொதுக் குழு கூட்டப்படும் என அறிவித்தோம். இதற்கிடையில் ஜூன் 14ஆம் தேதி தலைமைக் கழகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கும் தொண்டர்கள் நிர்வாகிகளிடம் ஒற்றைத் தலைமை குறித்து தெரிவித்தார்கள். யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது விவாதிக்கப்படவில்லை. அங்கே ஓ. பன்னீர்செல்வமும் இருந்தார்.

இதற்கிடையில், அந்தப் பொதுக் குழுவில் பிரச்சனை ஏற்படும் அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கும் மண்டபத்திற்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இது எவ்விதத்தில் நியாயம்? பொதுக் குழுவிற்கு தடையாணை பெற கட்சியின் ஒருங்கிணைப்பாளரே போகிறார். இதெல்லாம் சரியா? ” என்று எடப்பாடி கேள்வி எழுப்பினார்.

ஓ. பன்னீர்செல்வம் விடுத்திருக்கும் அழைப்பு குறித்து கேட்டபோது, “அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் சென்றார். யார் அழைத்து சென்றார்? அவருக்கு பதவி வேண்டும். பதவியில்லாமல் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது. ஆனால், பதவி மட்டும் வேண்டும். குடும்பத்திலிருப்பவர்கள் பதவி பெற வேண்டும். மகன் எம்.பியாகி மந்திரியாக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. இணைய வேண்டும் என்கிறார்.

தவிர, ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2017ல் எப்படிக் கூட்டப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் கூட்டப்பட்டது. அவர் அங்கே வந்திருக்க வேண்டும். மாறாக அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். 9 மணிக்குக் கூட்டம் என்றால் எட்டரை மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து கேட்டை உடைத்தார். பிரதான கதவை ரவுடிகளை வைத்து உடைக்கிறார். எல்லா அறைகளையும் உடைத்து கம்ப்யூட்டர்களை உடைத்து, முக்கியமான பொருட்களை திருடிச் சென்றார். சொத்துப் பத்திரங்களை எடுத்துச் சென்றார். இவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும். இதனை தலைமைக் கழக நிர்வாகிகள் தடுக்கும்போது, அவர்களை அடித்து உதைத்தார்கள். இன்னும் வழக்குகளை சந்திக்கிறார்கள். கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி செயல்பட்டால், அவரோடு எப்படி செயல்பட முடியும்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அனைத்துப் பொறுப்பார்களும் என்னை முதல்வராக அறிவிக்கிறார்கள். ஆனால், இவர் ஏற்க மறுத்தார். 15 நாள் தொலைக்காட்சிகளில் விவாதமாக ஆனது. இதனால் 3 சதவீத ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இவரால்தான் அது நடந்தது. தேர்தல் முடிந்த பிறகு யார் எதிர்க்கட்சித் தலைவராவது என்ற விவகாரம். கூட்டம் கூடியபோது 66 பேர் என்னை ஆதரிக்கிறார்கள். 3 பேர் அவரை ஆதரித்தார்கள். இவர் அதை ஏற்க மறுத்தார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி பொதுமக்கள் ஏற்பார்கள்? அதனால்தான் ஒற்றைத் தலைமை வேண்டுமென கேட்கப்பட்டது.

இது தவிர, தி.மு.கவோடு தொடர்பில் இருக்கிறார். இவருடைய மகன் எம்பி, ஸ்டாலினைச் சந்தித்து சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று கூறினார். இது தொண்டர்களிடம் மனச் சோர்வு ஏற்பட்டது. இதை எப்படி ஏற்க முடியும். இதனால்தான் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. சொந்தக் காலில் நிற்க வேண்டுமென நினைக்கிறேன். 1974லில் இருந்து படிப்படியாக மேலே வந்தேன். ஒரே கட்சியில் இருக்கிறேன்.

1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்ற வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஏஜென்டாக இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இவர் எப்படி விசுவாசியாக இருக்க முடியும்?

இருவரும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்ட வேண்டுமென்கிறது நீதிமன்றம். அப்படியானால் பொதுக் குழுவிற்குத்தான் அதிகாரம் என்பதை ஏற்கிறார்களா? நாங்கள் மேல் முறையீடு செய்திருக்கிறோம். அதில் எல்லாம் வெளிவரும்.

ஓ.பி.எஸ்சைப் பொறுத்தவரை பதவிக்கு வர வேண்டுமென்ரால் என்ன வேண்டுமானாலும் சொல்வார். இல்லாவிட்டால் தர்மயுத்தம் என்பார். அப்போது யாரும் வேண்டாம் என்பார். பதவி வேண்டுமென்றால் எல்லோரையும் சேர்ப்போம் என்பார். இங்கிருக்கும் நிர்வாகிகள் அவரோடு 15 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர் ஒத்துவரவில்லை. பெரும்பான்மை நிர்வாகிகள் நினைப்பதை பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சிக்கு வர முடியும். ஒற்றைத் தலைமைக்கு அவர் ஏற்க மறுக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு, பொதுக் குழுவுக்கு வந்து பாருங்கள். நீதிமன்றமே அதைத்தானே சொல்கிறது. பொதுக் குழுதான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. ஆனால், அங்கே வர மறுத்து கட்சி அலுவலகத்தை உடைக்கிறார். எம்.ஜி.ஆரால் கொடுக்கப்பட்ட மாளிகையை உடைத்து உள்ளே போனவர் இறந்து போனார். இன்னொருவர் ஜெயலலிதாவின் அறையை உடைத்தவர் இரண்டு கால்களும் உடைந்து கிடக்கிறார்.” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.