துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியான படம் `சீதா ராமம்’. இப்படத்தின் கதை இந்தியா-பாகிஸ்தான் அரசியலை மையமாக வைத்து நகர்ந்தாலும் தோட்டாக்கள் இல்லாத காதல் கதையாக அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த முன்னாள் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் ” ‘சீதாராமம்’ படத்தைப் பார்த்தேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில் அழகான காட்சிகள் கொண்ட படமாக உருவாகியுள்ளது. சாதாரணமான காதல் கதையாக இல்லாமல் ஒரு வீரமிக்க போர் வீரனின் பின்னணியுடன் பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் வகையில் உருவாகியுள்ளது இப்படம். அனைவரும் பார்க்க வேண்டியப் படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்திருக்கிறது இப்படம். போர் சத்தம் இல்லாமல் பார்ப்பதற்கு இதமான இயற்கையின் அழகிய காட்சிகளுடன் எடுக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.