எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, கொரோனா பேரிடர் காரணமாக அந்த போராட்டங்கள் அடங்கிய நிலையில், சில மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அதனை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம் தெரிவித்தார். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் அந்த சட்டம் அமலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் இன்னும் உருவாக்கப்படாததால் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்டத்துக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகளை மாணவர் அமைப்பினர் கைகளில் ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வடகிழக்கு மாணவர் சங்கத்தின் ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா கூறுகையில், பிராந்தியத்தில் உள்ள அனைத்து தலைமையகங்களிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாகவும், அமைதியான போராட்டங்களை அனுமதிக்காமல் அடக்குமுறை நடவடிக்கைகளை அசாம் அரசு மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கில் உள்ள பழங்குடியின குழுக்கள், இந்த சட்டம் வங்கதேச எல்லையில் இருந்து குடியேறுபவர்களின் வருகைக்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றன. இந்த சட்டத்தை வகுப்புவாதம் மற்றும் பிராந்தியத்தின் பழங்குடியினருக்கு எதிரானது என்று வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் அமைப்பாக திகழும் வடகிழக்கு மாணவர் சங்கத்தின் கூறுகின்றனர்.
அசாம் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள பிற மாநிலங்களின் நலன்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் எதிரானது என்ற தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக வடகிழக்கு மாணவர் சங்கத்தின் தலைவர் சாமுவேல் ஜிர்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்; ஆனால், அதனையும் மீறி சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.