சிறைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைகளுக்கு முடிவு – கைதிகளுக்கு புதிய வசதிகள் அளிக்க உ.பி. முதல்வர் யோகி ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரபிரதேச சிறைச்சாலைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உ.பி. சிறைச்சாலை நடைமுறைகளில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதில் கடந்த 1941 முதல் பின்பற்றப்பட்டு வந்த சிறைச்சாலை விதிமுறைகள் கையேடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அது, ‘உத்தரப்பிரதேச விதிமுறைகள் கையேடு 2022’ என்ற பெயரில் பின்பற்றப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை நேற்று அளித்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் ‘மாதிரி சிறைச்சாலைகள் கையேடு 2016’ வெளியிடப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைகளில் அதன்படி மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, உ.பி. அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனால் உ.பி. சிறைகளில் நிர்வகிக்கப்படும் தண்டனைக் கைதிகளுக்கு பல புதிய வசதிகள் கிடைக்க உள்ளன.

குழந்தைகளுக்கு நர்சரி பள்ளி

பெண் கைதிகளின் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பை விட சிறப்பான பாதுகாப்பு அறைகளும், 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி பள்ளியும் அமைக்கப்பட உள்ளது. இவர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளுடன் சத்தான உணவும் நோய் தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படும். 4 முதல் 6 வயது குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் சிறைக்கு வெளியில் உள்ள சிறந்த பள்ளிகளிலும் சேர்க்கப்படுவர். அரசு செலவு வாகனங்களில் அவர்கள் பள்ளிக்கு சென்று வருவார்கள்.
உ.பி.யின் லக்னோ, சித்ரகுட், கவுதம்புத்நகர், ஆசம்கர், லலித்பூர், பரேலி ஆகிய நகரங்களின் சிறைச்சாலைகள் அதிக பாதுகாப்பு கொண்டவையாக மாற்றப்படும்.

இதர சிறைச்சாலைகள் 5 வகையாக பிரிக்கப்படும். சிறைகளின் பாதுகாப்புக்காக காவலர்களுக்கு இதுவரை ஆங்கிலேயர் கால 303 வகை துப்பாக்கிகள் அளிக்கப்பட்டன. இதை மாற்றி, இனி அவர்களுக்கு 9 எம்.எம். கைத்துப்பாக்கி, இன்ஸாஸ் மற்றும் அதன் ரவைகள் வழங்கப்படும். சிறைகளில் ஏற்படும் திடீர் பிரச்சினைகளை சமாளிக்க இனி வெளியிலிருந்து காவலர்கள் அழைக்கும் தேவை இருக்காது எனவும் அதற்காக கூடுதல் காவலர்கள் நவீன தற்காப்பு ஆயுதங்களுடன் சிறையில் அமர்த்தப்பட உள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலி அணிய அனுமதி

பெண் கைதிகள் இனி கழுத்தில் தாலியும் சுடிதார் உடைகளும் அணிய அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு சானிட்டரி நாப்கின், தலைமுடிக்கான எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய அலங்காரப் பொருட்களும் அளிக்கப்படும். சிறையில் பிறக்கும் குழந்
தைகளுக்கு பதிவு மற்றும் தடுப்பூசிகள் அரசால் வழங்கப்படும். ஆண் கைதிகள் முடிகளை மழிக்க நவீன ரேசர்களும் முடிதிருத்துவோர் வசதியும் அளிக்கப்படும். கைதிகள் தங்கள் துணிகளை துவைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கைதிகளுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு தினமும் தேநீர், அனைத்து மதங்களின் பண்டிகைக் காலங்களில் சிறப்பு உணவு உள்ளிட்ட வசதிகள் கூடுதலாகக் கிடைக்க உள்ளன. கைதிகளால் நடத்தப்படும் தொழிற்சாலைகளும் கூட்டுறவு சங்கங்களும் சிறையில் அமைக்கப்பட உள்ளன. கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பல்வேறு சுயதொழில் பயிற்சிக்கும் சிறையில் வாய்ப்பு அளிக்கப்படும். பெரும்பாலான கைதிகள் இனி அறைகளில் அடைக்கப்பட மாட்டார்கள். ஒரே குடும்பத்தின் கைதிகள் சிறையின் உள்ளே சந்தித்து பேச அனுமதி உள்ளிட்ட புதிய வசதிகளும் அளிக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.