கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம்: அன்பில் மகேஷ் விளக்கம்!

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் வீடுகளில் முடங்கியிருந்த சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் பெருமளவு உதவியது.

திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நான்கு ஆண்டுகளாக முதன்மைச் செயலாளர் இல்லாமல் இயங்கிவந்த கல்வி தொலைக்காட்சிக்கு அந்தப் பதவி உருவாக்கப்பட்டு, மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு மாதம் 1.5 லட்சம் ஊதியம். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளராக வலதுசாரி சிந்தனை உடைய மணிகண்ட பூபதி என்பவரை நியமித்ததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அவரின் நியமனத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியாமலேயே அவர் நியமனம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, அவரது நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கல்வி தொலைக்காட்சி முதன்மை செயல் அலுவலர் நியமனம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரே மணிகண்ட பூபதி, கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அமைச்சரின் கவனத்து வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவரது நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக வைரலானது. அவர் எங்கெல்லாம் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. எனவே அவரது பின்புலம் குறித்து முதலில் விசாரித்து எனக்கு அறிக்கை சமர்ப்பியுங்கள், அதுவரை நியமனத்தை நிறுத்திவைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.