ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுனில் குமார் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற அடில் வானி என்ற தீவிரவாதியின் வீட்டை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று பறிமுதல் செய்தது.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பணியாற்றிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் மற்றும் அவரது உறவினர் பிதாம்பர் நாத் பட் ஆகியோர் மீது, அடில் வானி என்ற உள்ளூர் தீவிரவாதி கடந்த 16-ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சுனில் குமார் பட் இறந்தார். பிதாம்பர் நாத் பட் படுகாயம் அடைந்தார். அடில் வானி என்பவர் தடை செய்யப்பட்ட அல்-பதர் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்.
இச்சம்பவத்துக்குப் பின் குட்போரா பகுதியில் உள்ள வீட்டில் அடில் வானி மறைந்திருந்தார். அந்த வீட்டை போலீஸார் நேற்று சுற்றிவளைத்தனர். அப்போது, போலீஸார் மீது கையெறி குண்டை வீசிவிட்டு அடில் வானி தப்பிச் சென்றார். இது குறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், ‘‘அடில் வானியின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்படுவார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்படுவார்கள்’’ என்றார். நகரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த 5 வீடுகள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 10 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.