Chennai Tamil News: சென்னை தினத்தையொட்டி தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நந்தனம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இத்திருவிழா வரும் 19ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் கூறுகிறார்.
இத்திருவிழாவைக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜெகத் கஸ்பர் கூறியதாவது:
“383 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக சட்டப் பேரவையின் நிலத்தினை ஆங்கிலேயர் ‘மெட்ராஸ்’ என்று அடையாளப்படுத்திய நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘சென்னை தினம்’ எனக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு, ‘நட்பு, வணிகம், கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் இத்திருவிழாவை நந்தனம் கல்லூரியில் தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் ஒருங்கிணைத்துள்ளது.
தமிழ் சமுதாயத்திற்குள் சாதி, மதம், அரசியல் போன்று விளங்கும் வேறுபாடுகளைத் தவிர்த்து வேளாண்மை, வணிகம், தொழில் போன்ற பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளின் மூலம் மக்களை ஒருங்கிணைக்க இந்த குழு பாடுபடுகிறது.
அவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் சுமார் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சென்னையில் வணிகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இத்திருவிழா நடைபெறவிருக்கிறது.
தமிழ் வணிகர்களை ஊக்குவித்தால் தமிழக அரசின் பொருளாதாரத்திற்கு மிகுந்த பலனாக இருப்பார்கள். அதனால், சென்னையின் வணிகர்- விற்பனையாளர் சமூகத்தினை இத்திருவிழாவில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
இத்திருவிழாவில் சிறு மற்றும் குறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தனித்துவம் வாய்ந்த பொருட்களை சந்தைப்படுத்த விரும்புவோர் ஆகியவர்களை ஊக்குவிப்பதற்காக வணிக கண்காட்சி நடக்கிறது. மேலும், உணவுத் திருவிழா, தொண்டைமண்டல காளைகள் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி ஆகியவையும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வணிகர்கள் தொழில் முனைவோர்களை சந்தித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 21ஆம் தேதி இத்திருவிழாவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுபோக திருவிழா நடைபெறும் மூன்று நாட்களும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இசை, நடனம், கச்சேரி, கிராமிய விளையாட்டுகள், சிலம்பம், களறி அடிமுறை, மல்லம் போன்ற மரபு வழி வீர விளையாட்டுகள் அரங்கேற்றப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சிகளை ‘தமிழ் மையம்’ அமைப்பு ஒருங்கிணைக்கிறது”, என்று ஜெகத் கஸ்பர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil