அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். கெஜ்ரிவாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார். இதுஒருபுறமிருக்க பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுகு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், வட இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று இலவசங்கள் பற்றிய விவாதத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஒரு திட்டத்தை நல்ல இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு இலவசங்களை வழங்குகிற மாநிலம் என்று நீங்கள் கூறினால், இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருவாய், மனிதவழ மேம்பாடு, சமூக மேம்பாடு,உயர் கல்வியில் சேருபவர்கள் விகிதம் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடன்பெறும் வரம்பை விட எங்களின் நிதி பற்றாக்குறை குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை விட தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறைவானது. இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்பதை எப்படி யாரோ சொல்ல முடியும். நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.” என்றார்.
மேலும், இலவசம் தேவையில்லை; அது மக்களை பாதிக்கிறது என்று பிரதமர் மோடி சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நீங்கள் சொல்வதை சொல்ல உங்களுக்கு அரசியலைப்பு அடிப்படை இருக்க வேண்டும். உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் அல்லது எங்களை விட சிறப்பாக நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். எந்த அடிப்படையில் நான் உங்களுக்காக எனது கொள்கையை மாற்ற வேண்டும்.” என்று மத்திய அரசை விமர்சித்து ஆவேசமாக பேசினார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என்பதை பிடிஆரால் நிரூபிக்க முடியுமா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சீமான், “இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என்பதை பிடிஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? இலவசம் வழங்குவதும் லஞ்சம்தான். தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். இலவசங்களால் ஒரு புள்ளி அளவுக்குக்கூட வளராது. பொருளாதாரம் கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது.” என்றார்.
முன்னதாக, மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இலவச திட்டங்கள் பயனளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடக்கிறது. அந்த விவாதங்களுக்கு அப்பால் முக்கியமானது செயல்திறன் தான். அரசு செயல்படுத்தும் திட்டம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். தமிழக/இந்திய வரலாற்றிலேயே பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது தனிநபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சட்டவரம்பை மீறி யார் கொடுக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. ஒரு கருத்து நல்ல கருத்தாக, செயல்படுத்தக்கூடிய கருத்தாக இருந்தால் ஏற்போம். ஆனால் சர்வாதிகாரமாக எங்களுக்குத்தான் உரிமை, தகுதி இருக்கிறது என்று சொன்னால் அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.