பெங்களூரு: கர்நாடக அரசின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 61 பதக்கங்களை வென்றனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கலப்பு இரட்டை பிரிவில் வௌ்ளி பதக்கமும் வென்றார்.
பெங்களூரு திரும்பிய இந்த விளையாட்டு வீரர்களுக்கு பெங்களூருவில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
அதில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: கர்நாடக மாநில விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கவனம் கொண்டுள்ளது. அனைத்து விதமான விளையாட்டுகளிலும் ஈடுபடும் வீரர்களுக்கான பயிற்சி, ஊக்கத்தொகை உள்ளிட்ட சகல வசதிகளையும் அரசு செய்துவருகிறது. ஏற்கெனவே விளையாட்டு வீரர்களுக்கு காவல் மற்றும் வனத் துறையில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கர்நாடக அரசின் அனைத்து துறைகளுக்கும் 2 சதவீத ஒதுக்கீட்டை விரிவாக்கம் செய்து, சகல துறைகளிலும் ஏற்படும் வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம் மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு பசவராஜ் கூறினார்.