இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவானது இந்தியன் 2 படம். லைகா புரொடக்ஷன் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்த இந்தப் படம், விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் படப்பிடிப்பு தள விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டாது. இயக்குநர் சங்கர் கேட்ட பட்ஜெட்டை கொடுக்க மறுத்த லைகா, தாங்கள் கூறும் பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்குமாறு வற்புறுத்தியது.
இதனை ஏற்க மறுத்த இயக்குநர் சங்கர், படத்தை இயக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காமல் நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது. இருப்பினும், சங்கர் தெலுங்கில் ராம்சரண் லீட் ரோலில் நடிக்கும் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் விக்ரம் படத்தில் பிஸியானார். ஆர்சி 15 படத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்ட நிலையில், விக்ரம் படம் வெளியாகி வசூலில் ராஜபாட்டை நடத்தியது. இந்தப் படத்தின் வெற்றி மீண்டும் இந்தியன் 2 படத்திற்கான தொடக்க புள்ளியை அமைத்து கொடுத்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தயாரிப்பு பணியில் இணைய விருப்பம் தெரிவித்ததால், லைகா நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டது.
உடனடியாக படப்பிடிப்பு பணிகளை கவனிக்க தொடங்கினார் இயக்குநர் சங்கர். விகரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் கமல், அடுதடுத்து புதிய படங்களின் தயாரிப்பு பணிகளை தொடங்கி வைத்துவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு இந்தியன் 2 படத்திற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கும் அவர், விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார். ஆனால், அவரின் வருகைக்கு முன்னதாகவே இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் சங்கர். ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் காட்சிகள் விரைவாக படமாக்க இந்தியன் 2 படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.