பாலியல் துன்புறுத்தல் புகார் சொல்பவர் தூண்டும் ஆடை அணிந்திருந்தால் வழக்கு நிற்காது: கேரள நீதிமன்றம்

Getty Images

பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு உள்ளான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம், புகார் தரும் பெண் “பாலியல்ரீதியாகத் தூண்டும்” ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354(ஏ) (பாலியல் துன்புறுத்தல்)-இன் கீழ் குற்றச்சாட்டை முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “இந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே சந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்த முகாமில் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் எழுந்தது.

“முகாம் முடிந்த பின் பங்கேற்பாளர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்திரன் தம்மை பிடித்து தகாத முறையில் தொட்டதாக ஜூலை 29ஆம் தேதி அளித்தப் புகாரில் அந்தப் பெண் கூறியுள்ளார்,” என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய மாவட்ட செஷன்ஸ் நீதிபதி எஸ்.கிருஷ்ண குமார், “குற்றம் சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், புகார் அளித்தவரே பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில், பிரிவு 354ஏ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதன்மையாக நிற்காது,” என்று கூறியுள்ளார்.

மேலும், “74 வயதான, மாற்றுத்திறனாளியான ஒருவர், வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டப்பட்ட செயல்களைச் செய்ய முடியாது. எனவே, இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கு,” என்று நீதிமன்றம் கூறியது.

சட்டப்பிரிவு 354-இன் வார்த்தகளில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு பெண்ணை மானபங்கம் செய்யும் எண்ணம் இருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிவதாகக் கூறிய நீதிமன்றம், இந்தப் பிரிவின் கீழ் வழக்கு நிற்கவேண்டுமானால், இந்தப் பிரிவில் கூறியபடி உடல்ரீதியான தொடர்பு மற்றும் விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் பாலியல் கருத்துகள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அந்தப் பெண் தன்மீது பொய்யான புகாரை எழுப்பியுள்ளதாக சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புகார் அளித்த பெண், பாலியல் வன்கொடுமையின் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்த, படித்த பெண் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், “அவர் ஏன் புகாரளிக்கத் தயங்கினார் என்பதை அவரே விளக்க வேண்டும். ஆனால், எந்த விளக்கமும் அவரிடமிருந்து வரவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.

சந்திரன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புகாரளித்த பெண்ணின் ஒளிப்படங்களை அந்தப் பெண்ணே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

சிபிஎம் தலைவரும் கேரள பெண்கள் ஆணையத் தலைவருமான பி.சதிதேவி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார். அவர் “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை அவர்களின் ஆடைகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்தத் தீர்ப்பு பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் தவறான முன்னுதாரணமாக இருக்கும்,” என்றார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

ஐந்து வயது சிறுமியின் பையில் துப்பாக்கி தோட்டா

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியின் கைப்பையில் துப்பாக்கித் தோட்டா கிடைத்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

9எம்.எம் ரக துப்பாக்கித் தோட்டா

Getty Images

9எம்.எம் ரக துப்பாக்கித் தோட்டா

பெங்களூரு செல்லத் தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய கலால் பிரிவு உயரதிகாரியின் குடும்பத்தினருடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்கிறது அந்த செய்தி.

அப்போது, அவர்களுடன் இருந்த 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியின் குடும்பத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது 5 வயது சிறுமியின் கைப்பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் வெடிக்காத ஒரு துப்பாக்கித் தோட்டா இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்தத் தோட்டாவை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அதிகாரியின் பயணத்தை ரத்து செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து, போலீசார் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றதாகவும் சுற்றுலாவை முடித்துவிட்டு துபாய் வழியாக சென்னை வந்து பெங்களூரு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு கடற்கரை மணலில் இந்தப் பொருள் கிடந்ததாகவும் அது துப்பாக்கித் தோட்டா என்று தெரியாமல் குழந்தைக்கு எடுத்து விளையாடக் கொடுத்திருந்ததாகவும் கூறினார். அந்தத் துப்பாக்கித் தோட்டாவை போலீசார் ஆய்வு செய்தபோது, அது பெரிய துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய 9 எம்.எம் ரகத்தைச் சேர்ந்தது எனத் தெரிய வந்தது. இதையடுத்து, துப்பாக்கித் தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதிகாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டு, எச்சரித்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனா்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

Getty Images

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

ரூ. 200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் ஃபேர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவருடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அவருடைய 7 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் குற்றவாளிகளின் பெயருடன் இணைந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் நேரடியாக கருத்து தெரிவிக்காமல், தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜாக்குலின், அந்தப் பதிவில், “நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள். நான் சக்தி வாய்ந்தவள். நான் என்னை ஏற்றுக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும். நான் வலிமையோடு இருக்கிறேன். எனது இலக்குகள் மற்றும் கனவுகளை நான் அடைவேன், என்னால் அதைச் செய்ய முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.

மேலும் அந்தச் செய்தியில், “கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர். ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீசார் கடந்த 2017-இல் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.