வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கடிதம் கொடுத்த சாவர்க்கரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?” எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க வினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அவரது ஆதரவாலர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள். அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் மீண்டும் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க வினர் கொடுத்த வழக்கில் வரும் 25-ம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் ஆடை கட்டிய பாஜக. அதே போல பாஜக காவி ஆடை கட்டிய காங்கிரஸ். சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார்.
அவரையும், சாகும் வரை தங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன் என பிரிட்டிசாருக்கு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரையும், பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம். அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்துவருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM