தூத்துக்குடி மாநகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் முத்துரம் என்ற லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் ன்பிரித்து எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண்உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உரத்தை ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் என வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், உள்ள விவசாயப் பணிகளுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் வழங்க முத்துரம் என்ற பெயரில் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது.
உரத்திற்கான லோகோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு லோகோவை அறிமுகப்படுத்தினார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 180 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கு அனுப்பப்படுகிறது. குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டு தொடர்ந்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண்உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
குப்பையில் இருந்து தயாரிக்க கூடிய உரத்தில் அதிக சத்துக்கள் இருக்க கூடியது. ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் வீதம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.