மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் இன்றி அமையாத ஒன்றாகும். ஒவ்வொரு பெண்களும் தங்கள் பருவ வயது முதல் எதிர்கொள்ளும் இயற்கை நிகழ்வாகும். பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாதவிடாய் அமைகிறது.
மாதவிடாய் குறித்து பல நாடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் மாதம்தோறும் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினை இயற்கையான ஒன்று. எனினும் அதுகுறித்த புரிதல் பல பகுதிகளில் மக்களிடையே இல்லாததால் பல மோசமான விளைவுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு பெரும் சிக்கலையும் ஏற்ப்படுத்துகிறது.
இதுகுறித்து உலகம் முழுவதும் பெண்ணிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்காட்லாந்து அரசாங்கம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட சகல பொருட்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது இடங்களில் உள்ள பெண்கள் கழிவறை, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என நாட்டின் அனைத்து இடங்களிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக கிடைப்பதை அமைச்சர்கள் உறுதிபடுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தில் தேவையான பொருட்களை வழங்குவது அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
இதுகுறித்து ஸ்காட்லாந்து சமூக நீதி செயலர் ஷோனா ராபின்சன் கூறும்போது, “அனைத்து பெண்களுக்கும் நாப்கின்கள் உட்பட மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்க முடிவெடுத்திருப்பது சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது. மேலும், பெண்களுக்கு இந்த பொருட்களை அணுகுவதில் உள்ள நிதி சார்ந்த தடைகளையும் இது அகற்றும்” என்றார்