சென்னை : பிரம்மாண்ட டைரக்டர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். இவர் டைரக்டர் முத்தையா இயக்கிய விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடி, சூர்யா தயாரிப்பில் நடித்துள்ளார். பக்கா கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார். முதல் பட ரிலீசுக்கு முன்பே செம பிரபலமாகி விட்டார்.
ஏற்கனவே அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அதிதி, விருமன் ரிலீசுக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மனதையும் அதிதி கவர்ந்து விட்டார்.
அப்பாவுக்கு வாழ்த்து சொன்ன அதிதி
இந்த சமயத்தில் அதிதியின் அப்பாவும், டைரக்டருமான ஷங்கர் ஆகஸ்ட் 17 ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக அதிதி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து தான் தற்போது அதிதி பற்றியே அனைவரையும் பேச வைத்துள்ளது.
நன்றி ஷங்கர் சார்
அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில் சினிமாவை கொண்டு வந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்தியா படங்களின் முன்னோடி, நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார். ஆனால் என் அப்பாவுக்கு முதலில் எப்போதும் நன்றி. லவ் யூ- சின்னு என குறிப்பிட்டுள்ளார்.
அதிதிக்கு இப்படி ஒரு செல்ல பெயரா
இந்த அழகான வாழ்த்தில், அப்பா மீது தனக்கு இருக்கும் அன்பு மற்றும் மரியாதையை மட்டுமல்ல, வீட்டில் தனது செல்ல பெயர் சின்னு என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். அதிதி பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது செம சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த படத்திற்கு தயாராகிட்டார்
விருமன் படத்திற்காக வாழ்த்து மழையில் நனைந்து வரும் அதிதி, விரைவில் தனது அடுத்த படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்க உள்ளார்.