புதுடில்லி : பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர் ஷானவாஸ் ஹூசேன் மீது, 2018ல் கொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார புகார் மீது உடனடியாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய புதுடில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் மீது, புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2018ல் அங்குள்ள போலீசில் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.
இந்த புகார் குறித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷானவாஸ் ஹூசேன் தொடர்ந்த வழக்கை, செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், 2018ல் அளித்த இடைக்கால உத்தரவில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஷானவாஸ் ஹூசேன் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
உத்தரவில் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாவது:எந்த ஒரு வழக்கிலும், முதலில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, அதன்பிறகே விசாரணை நடத்த வேண்டும். ஆனால், இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் போலீசார் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டுள்ளனர். உடனடியாக இந்த பாலியல் பலாத்கார புகார் மீது, புதுடில்லி போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.
மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, ஷானவாஸ் ஹூசேன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement