மும்பை,
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விராட் கோலி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது ஆட்ட திறன் மூலம் கிரிக்கெட் உலகையே கோலி ஆட்சி செய்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினோடு ஒப்பீடு பேசப்பட்ட அவர் தற்போது ரன்கள் குவிக்க திணறி வருகிறார். இந்த நிலையில் தனது கடினமான சூழல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
ஒரு விளையாட்டு வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வரும்போது மனரீதியாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இனி வரும் வீரர்கள், உடற்தகுதி நன்றாக வைத்துக்கொள்வது மற்றும் மீண்டு வருவதற்கு தொடர் முயற்சிகளை மட்டும் வைத்திருந்தால், சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார்.
தனிமையை நான் அனுபவித்துள்ளேன். ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், நான் சில நேரங்களில் தனியாக இருப்பது போன்று உணர்ந்துள்ளேன். எனவே நமக்காக சற்று நேரத்தை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள்.
அப்படி முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால், பின்னர் பிரச்சினைகளை சரிசெய்வது என்பது கடினமாகிவிடும். கடுமையான சூழல்களை கையாண்டு பழக்கமாக்கி கொள்ளுங்கள் அப்போது உங்கள் பணி சுலபமாகும் என கோலி தெரிவித்துள்ளார்.