பாஜகவின் தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என வீதி வீதியாக முழங்கியவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தான் அக்கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் அக்கட்சி பேசுபொருளானது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அவர் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த போது தெலங்கானாவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் தமிழிசை கைகளில் சேர்த்து கொடுக்கப்பட்டது.
கட்சி தலைவராக இருக்கும் போதும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருடனும் நட்பு பாராட்டும் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர் பதவியில் அமரவைக்கப்பட்ட போதும் மிகவும் எளிதாக தன்னை அனைவரும் அணுகும் வகையில் செயல்படுகிறார். ராஜ் பவன் மாளிகைக்குள் முடங்கிவிடாமல் மக்களை சந்திக்கிறார்.
அந்த வகையில் நேற்று கோபாலபுரம் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரியை சந்தித்து கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று வந்துள்ளார். தயாளு அம்மாளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இது குறித்து தமிழிசை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி, “கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.
இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.