திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 5ஆம் ஆண்டு மாணவி தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பயின்று வநத ஐந்தாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காயத்ரி இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு ஐந்தாம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் படித்து வருகிறார். மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி படித்து வந்துள்ளார் காயத்ரி. ஆகஸ்ட் 17ம் தேதியன்று (புதன்கிழமை) காயத்ரி அறையை விட்டு வெளியே வரவில்லை.

கல்லூரிக்கு சென்று வகுப்புகளை முடித்துவிட்டு வந்த அவரது நண்பர்கள் காயத்ரி அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த நண்பர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவர்கள் ஒன்றிணைந்து காயத்ரியை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவி காயத்ரி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்திருந்த கடித்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

அதில் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக காயத்ரி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடிதத்தை போலீஸார் வெளியிட மறுத்து விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.