ஹைதராபாத்: பாஜகவில் தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி புகார் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார்.
பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
சமீப காலமாக தெலங்கானாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து வருகிறது. ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் சவால் விடுத்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் கட்சி பொதுக்கூட்டம் எதிலும் நடிகை விஜயசாந்தி மேடை ஏறி பேசவில்லை.
இந்நிலையில் விஜயசாந்தி நேற்று ஹைதராபாத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சர்வய்ய பாபண்ணா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். பின்னர் அவரிடம், “சமீப காலமாக நீங்கள் எங்கும் பேசுவதில்லையே ஏன்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விஜயசாந்தி, “தெலங்கானா பாஜகவினர் என்னை மவுனத்தில் ஆழ்த்தி விட்டனர். எங்கும் என்னை பேச விடுவதில்லை. இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து விஜயசாந்தி பேசியதாவது:
நான் ஏன் அதிருப்தியில் உள்ளேன் என்பதை நீங்கள் எங்கள் கட்சியில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்த பாபண்ணா ஜெயந்தி விழாவில் கூட மூத்த தலைவர் லட்சுமண் வந்தார். பேசினார். சென்றார். அவரிடம் இதுகுறித்து கேளுங்கள்.
என்ன நடக்கிறது என்பதை தெலங்கானா மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமாரிடம் கேளுங் கள். கட்சி எனக்கு பொறுப்புகளை வழங்கினால்தான் என்னால் செயல்படுத்த முடியும்.
நான் நாடாளுமன்றத்தில் தெலங்கானாவுக்காக போராடிய பெண். இதனை உலகம் அறியும். என் கதாபாத்திரம் கட்சியில் நன்றாகவே உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்வதும் பயன்படுத்திக் கொள்ளாததும் அவர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு கோபமாக கூறிவிட்டு விஜயசாந்தி சென்றார்.