ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், “ஜம்மு காஷ்மீரை சேராத மற்ற மாநில மக்கள் 25 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாகச் சேர்க்கவிருப்பதாகவும், வெளியாள்கள் வாக்காளர்களாகப் பெயர் சேர்ப்பதற்கு இருப்பிடம் தேவையில்லை, அவர்கள் தொழிளாலர்களாகவோ, அல்லது மாணவர்களாகவோ இருக்கலாம் என்று ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) ஹிர்தேஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
2019 -ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பின்னர், காஷ்மீரில்லாதவர்கள் காஷ்மீரில் நிலத்தை வாங்கவும், வாக்களிக்கவும் அரசியலமைப்பு மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக உள்ளூர்வாசிகளாக அல்லாதவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இது தொடர்பாக மெஹ்பூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஜம்மு காஷ்மீரில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அரசின் முடிவு. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்கை அதிகப்படுத்தத் தான், உள்ளூர் வாக்காளர் அல்லாதவர்களை வாக்களிக்க அனுமதிப்பது. இது தேர்தல் முடிவுகளைப் பெருமளவில் பாதிக்கும். காஷ்மீர் மக்களை வலுவிழக்கச் செய்ய, இரும்புக்கரம் கொண்டு இங்கு ஆட்சியைத் தொடர்வதே இதன் உண்மையான நோக்கம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக ஒமர் அப்துல்லாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. 25 லட்சம் பா.ஜ.க வாக்காளர்களைப் பின்கதவு வழியாக ஜம்மு கஷ்மீருக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.