செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவ மற்றும் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு வழங்கிய கடன் உதவி கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நரிக்குறவ பெண் அஸ்வினி பேசும் வீடியோ பல்வேறு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. அதில் அவர், எங்கள் பகுதிக்கு முதல்வர் வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளித்தார்கள். ஆனால் எதுவும் வந்து சேரவில்லை. சுமார் ஓராண்டாகி விட்டது. கடன் தர வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் உதவிகள் கிடைக்கவில்லை. வீடு, கழிவறை கட்டித் தருவதாக சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இதுவரை 1.5 கோடி ரூபாய் செலவில் நலத் திட்டங்கள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
1. இதுவரையில் 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள் 35 ஜாதி சான்றிதழ்கள், ஆறு முதியோர் உதவித்தொகை வாக்காளர் அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
2. வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட 12 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதமும், அஸ்வினி சேகர் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அஸ்வினி சேகர் என்பவர் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி கோரியதன் பேரில் கடன் வழங்க அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற்கான கடன் வழங்கும் ஆணையையும் சேர்த்து அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும் பட்சத்தில் தான் பெற்றுக் கொள்வதாக தெரிவித்து வங்கி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளன.
3. அஸ்வினி சேகர் என்பவர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திட இட ஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடற்கரை பகுதி ஐந்து ரதம் பகுதி ஒத்தவடத் தெரு போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அஸ்வினி சேகர் என்பவர் கூறியவாறு கடை இருப்பிடம் அமையவில்லை. அவர் குறிப்பிட்டு கேட்கும் கடையானது ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 17. 8. 2022 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரியதன் அடிப்படையில் மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு 18.08.2022 அன்று காலை கடை எண் 66 ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்து விட்டார்.
4. மேலும் புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறை, கட்டிடம் கட்டிக் கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
5. செங்கல்பட்டு மாவட்ட பூஞ்சேரி கிராமத்தின் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.5 கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒப்புழைப்பை பெற செங்கல்பட்டு சார் ஆட்சியர் நேரிடையாக சென்று விவரங்களை எடுத்து கூறி உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.