சென்னை: தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பை இணைத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைப் போக்கும் வகையிலும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரைஇணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக ஆக. 1-ம் தேதி முதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று, விவரங்களைப் பெற்று இதற்கான ‘கருடா’ செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபித சாஹு கூறியதாவது: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 6.08 சதவீதம் பேர், அதாவது 37,81,498 பேர் தங்கள் ஆதார் விவரங்களை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் முதலிடம்
பொதுமக்கள் வாக்காளர் உதவி எண் மற்றும் ‘என்விஎஸ்பி’ இணையதளத்திலும் தங்கள் ஆதார் விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஆதார் பதிவில் முதலிடத்தில் அரியலூர், 2-ம் இடத்தில் பெரம்பலூர், 3-ம் இடத்தில் விருதுநகர் மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் 20 சதவீதத்துக்கும் மேல் ஆதார் பதிவு நடை பெற்றுள்ளது.
நவ. 9-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும் நிலையில், ஆதார் இணைப்புப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும். இதுதவிர, சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களைப் பெற்றும், பதிவு செய்யப்படும்.
மேலும், ஆதார் இணைப்பு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர, அகில இந்திய வானொலி, எஃப்.எம். ரேடியோ, தூர்தர்ஷன் மூலமும் தலைமை தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தப் பணி முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
வரும் நவ. 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர், 17 வயதுடையவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயதாகும்போது பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, அவர்கள் தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.