நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் இணையதள ஆட்சி மன்றக் குழுவில், இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அல்கேஷ் குமார் சர்மாவை உறுப்பினராக நியமித்து பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அறிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் இணைய நிர்வாகத்தை மேற்கொள்ள கடந்த 2006-ம் ஆண்டில் இணைய ஆட்சி மன்றம் (ஐஜிஎப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இணைய தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வளரும் நாடுகளில் இணைய ஆட்சி நடைமுறைக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க உதவுவது உள்ளிட்ட பணிகளை ஐஜிஎப் மேற்கொள்கிறது.
இந்தச் சூழலில் 10 நிபுணர்கள் அடங்கிய ஐஜிஎப் தலைமைக் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நியமித்துள்ளார். இதில் இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்கா, எகிப்து, டென்மார்க், மெக்ஸிகோ, எஸ்டோனியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரியா, நைஜிரீயா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.