அனைத்து எம்-சாண்ட் மற்றும் ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக 8 மாவட்டங்களில் சுமார் 20,000 மணல் லாரிகள் நிறுத்தப்பட்டன.
வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளூவர்கோட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுபவர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இத்துறையில் ஊழல் நடந்துள்ளதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மாநில அரசு எம்-சாண்ட் வர்த்தகத்தை சீரமைத்து, இ-வே பில் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4 ஆயிரம் எம்.சாண்ட் கிரஷர்களை அரசு முறைப்படுத்த வேண்டும். தரமான மணல் கிடைக்க மாநில அரசு கூடுதல் ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது
இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை (reflective stickers) பொருத்துவதற்காக வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின் பின்னணியில் ஊழல் உள்ளது.
லாரி உரிமையாளர்கள் ₹1,500 மதிப்புள்ள ஸ்டிக்கர்களுக்கு ₹4,000 முதல் ₹5,000 வரை செலுத்த வேண்டும். வாகனத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மாநில அரசு விசாரிக்க வேண்டும். மத்திய அரசு வாகனங்களுக்கு எப்.சி.யின்போது ஒட்டப்படும் ஒளிரும் பட்டைக்கு 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, அதிக அளவில் கட்டண வசூல் செய்கிறது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“