பாட்னா: போலி போலீஸ்காரர் பார்த்திருக்கிறோம். போலி ஐஏஎஸ் அதிகாரியை பார்த்திருக்கிறோம். போலி சிபிஐ அதிகாரியை பார்த்திருக்கிறோம். ஆனால், போலி போலீஸ் ஸ்டேசன் பார்த்திருக்கிறீர்களா? அந்த குறையை போக்கி விட்டார்கள். பீஹார்காரர்கள். அங்கு, 8 மாதமாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீஹாரின் பங்கா மாவட்டத்தில், நகர போலீஸ் ஸ்டேசன் மற்றும் மாவட்ட எஸ்.பி., வீடு அமைந்துள்ள பகுதி அருகே விருந்தினர் இல்லம் ஒன்றில், கும்பல் ஒன்று போலியாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்துள்ளனர். இந்த கும்பல், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் அணியும் சீருடை போன்றே உடையணிந்து மக்களை ஏமாற்றியுள்ளனர். இதற்காகவே அந்த விருந்தினர் மாளிகையை, போலீஸ் ஸ்டேசன் உட்கட்டமைப்பை போலவே மாற்றி அமைத்துள்ளனர். அந்த கும்பலில் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் போலீஸ் சீருடையில் வந்தவர்களை, நகர போலீஸ் அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது. இதனையடுத்து 2 பெண் உட்பட 5 பேரை போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தியதற்காக கைது செய்தனர். அதில், முக்கிய குற்றவாளி தலைமறைவானான். அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்ட விண்ணப்பங்கள், போலி அடையாள அட்டை, வங்கி செக் புத்தகங்கள், மொபைல் போன்கள், ஐக்கிய ஜனதா தள மாவட்ட தலைவரின் சீல், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், இக்கும்பல், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதுடன், அரசின் திட்டப்பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதான இரண்டு பெண்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தலைமறைவான முக்கிய குற்றவாளி, வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் 90 ஆயிரம் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி போலீஸ் ஸ்டேசனில் பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement