லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலையில் உள்ளது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார். இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அந்த நாட்டின் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். ஆனால், அதன் பின் நடைபெற்ற பல்வேறு கட்ட தேர்தல்களில் அவர் பின்னடைவை சந்தித்தார்.
இந்த நிலையில், தற்போது வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் அமோக ஆதரவைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி 961 கட்சி உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ ஏற்கெனவே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதில், 60 சதவீதம் பேரின் ஆதரவு லிஸ் டிரஸுக்கு கிடைத்துள்ளது. அதேசமயம், ரிஷி சுனக்கை கன்சர்வேடிவ் கட்சி தலைவராகவும், பிரிட்டன் பிரதமராகவும் தேர்வு செய்ய 28 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் வெளியான ஆய்வில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் 32 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற ஆய்விலும் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்கை பின்னுக்குத்தள்ளி லிஸ் டிரஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.