சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டார். அவர் வகித்த ஒருங்கிணைப்பாளர் பதவியும் கலைக்கப்பட்டுவிட்டது.
ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இடைக்கால பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிமுகவில் பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உள்கட்சி விவகாரம், நிர்வாக விஷயங்களில் நீதிமன்றம் தலையிட்டு கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை.
கட்சி ஒற்றைத் தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டைத் தலைமை வேண்டும் என ஒரு தனி நபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இத்தீர்ப்பு உள்ளது. ஜூலை 11-ம்தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். மனுதாரர் கோராத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்ட பொதுக்குழுவுக்கு எதிரான இந்த தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. இருவரும் இனி இணைந்து செயல்பட முடியாது என்பதால் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வில் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நேற்று முறையீடு செய்தார். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டும் என்று கோரி, ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.