உடைகளைவிட, உள்ளாடைகள் நம் தேகத்துடன் அதிக தொடர்பில் இருப்பதால் அவை ஆரோக்கியம் தொடர்பான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவை. எனவே, உடைகளைவிட உள்ளாடைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும். மேலும், எலாஸ்டிக், ஹூக் என அதன் ஆயுள் குறைந்துவிடாதபடியான பராமரிப்பும் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான சில வழிமுறைகள்…
* வாஷிங் மெஷினில் மற்ற துணிகளுடன் உள்ளாடைகளையும் ஒன்றாகப் போட்டு துவைக்க வேண்டாம். முடிந்தவரை தனியாக, கைகளால் துவைக்கலாம். அல்லது, வாஷிங் மெஷினில் உள்ளாடைகளை துவைப்பதற்கு எனக் கிடைக்கும் உள்ளாடை பைகளை வாங்கி, அதைப் பயன்படுத்தி மெஷினில் துவைக்கலாம்.
* உள்ளாடைகள் மென்மையானவை என்பதால் கடினமான சோப் மற்றும் டிடர்ஜென்ட் பயன்படுத்த வேண்டாம். மென்மையான சோப்பு கொண்டு கைகளால் அலசவும். இதனால் உள்ளாடைகளில் சேதம் ஏற்படுவது, கிழிவது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். டிடர்ஜென்ட் மூலம் உடலில் ஏற்படும் அலர்ஜிகளையும் தவிர்க்கலாம்.
* வெளிர் நிற உள்ளாடைகளைவிட அடர் நிற உள்ளாடைகளில்தான் அழுக்குத் தெரியாது என்பதால் அதற்குத்தான் அதிக கவனம் கொடுத்து துவைக்க வேண்டும்.
* உள்ளாடைகளை அறைவெப்பநிலையில் உள்ள நீரிலோ, குளிர்ந்த நீரிலோ அலசலாம். இதனால் உள்ளாடைகளில் உள்ள ஸ்ட்ராப், எலாஸ்டிக், லேஸ் போன்றவை சிதையாமல் இருக்கும்.
* உள்ளாடைகளை உலர்த்துவதற்கு முன் பிழிய வேண்டாம். உலர்ந்ததும் அயர்ன் செய்யவும் வேண்டாம். இவற்றை எல்லாம் தவிர்ப்பது அவற்றின் ஆயுள் குறையாமல் தவிர்க்கும்.
* பேடட் பிரேஸியர் போன்றவற்றை, துவைத்த பின் அலமாரியில் வைக்கும்போது மடித்து வைக்காமல், அவற்றின் வடிவத்தில் அப்படியே வைக்கவும். அல்லது, தற்போது கடைகளில் உள்ளாடைகளை வைப்பதற்கெனக் கிடைக்கும் பிரத்யேகப் பைகளை வாங்கிப் பயன்படுத்தலாம். இதனால் அதன் வடிவம் சிதையாமல் இருக்கும்.
* உள்ளாடைகளில் வாசனை திரவியங்கள், ஸ்பிரே என்ன எந்த ரசாயனங்களையும் பயன்படுத்த வேண்டாம்.