ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெளிமாநில மக்களும் வாக்காளராக பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிமாநில மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி ஆகஸ்ட் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த சூழலில் வெளிமாநில மக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் கூறியதாவது:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநில மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க எவ்வித தடையும் இல்லை. எனவே சிறப்பு முகாம்களை நடத்தி புதிய வாக்காளர்களை சேர்க்க உள்ளோம்.
தற்போது 76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வெளிமாநில மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதால் கூடுதலாக 25 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் வாக்குரிமை பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறும்போது, “காஷ்மீரில் பாஜக வெற்றி பெற வெளிமாநில மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது. எந்த வகையில் முயன்றாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறும்போது, ‘‘நாஜி ஜெர்மனி அரசு போன்று மத்திய அரசு செயல்படுகிறது. பின்வாசல் வழியாக 25 லட்சம் வாக்காளர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
தீவிரவாதிகள் மிரட்டல்
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீரை சேராத மக்களை வாக்காளர் பட்டியலில்சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே வெளிமாநில மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பண்டிட்டுகள், வெளிமாநில தொழிலாளர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது வெளிமாநில மக்கள் மீது தாக்கு தல்நடத்துவோம் என்று லஷ்கர் மிரட்டல் விடுத்திருப்பதால் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.