தஞ்சாவூர்: “அதிமுகவுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது. எனவே கூட்டுத்தலைமை இருந்தால்தான், இந்த இயக்கம் வலுவானதாக மாற முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேற்று பேட்டியில் அண்ணன் ஓபிஎஸ், இபிஎஸ் செய்த பல சூழ்ச்சிகளையெல்லாம் சொல்லாமல், அவருடைய நயவஞ்சகத்தை வெளிப்படுத்தாமல், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மனகசப்புகளை மறந்து எதிர்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக மீண்டும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என்பதை முன்னிறுத்தி ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
நேற்று எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் அதைக் நீங்கள் காண்பீர்கள்.
கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் உள்பட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் இந்த இயக்கத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தவர்களையும் அழைத்துள்ளார். டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
மேல்முறையீட்டு வழக்கை நாங்கள் சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது கிடையாது. எனவே, கூட்டுத் தலைமை இருந்தால்தான், இந்த இயக்கம் வலுவானதாக மாற முடியும். நேற்று எடப்பாடி பழனிசாமியின் முகம் எவ்வளவு கொடூரமாக இருந்தது. ஓபிஎஸ் முகம் புன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும். மற்ற கட்சிகளை இந்த விவகாரத்தில் இணைத்து பேசாதீர்கள். இது எங்கள் உள்கட்சி பிரச்சினை. மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பமாட்டோம்” என்று அவர் கூறினார்.