கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமம் உள்ளது. இங்கு பழையாறு மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது.கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமாக இருப்பதால் இப்பகுதியில் இயற்கை துறைமுகம் மாக பழையாறு துறைமுகம் விளங்கி வருகிறது. துறைமுகத்தை 1982 ஆம் ஆண்டு இந்த பழையாறு துறைமுகம் மேம்படுத்தப்பட்டு படகுகள் அணையும் தளம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பதற்கும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், தாங்கள் பிடித்து வரும் மீன்களை பத்திரமாக இறக்குவதற்கும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர். துறைமுகத்தின் மூலம் கொடியம்பாளையம், மடவாமேடு, கூழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துறைமுகம் மிகவும் சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. கடந்த2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பில் பழையார் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படகு அணையும் தளம், மீன் இறங்கு தளம், கருவாடு உலர வைக்கும் தளம், பெண்களுக்கான தனித்தனி கழிவறை வசதி, கழிவுநீர் எளிதில் வெளியேறிச் செல்ல கால்வாய் வசதி, இங்குள்ள கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை துறைமுக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி பயன்படுத்துவதற்காக நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இப்படி பல்வேறு வகைகளில் பழையாறு மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் பழையாறு துறைமுகம் இருந்து வந்ததால் தற்போது மீன் ஏலக்கூடம், உயர் கோபுர விளக்கு, ஐஸ் பிளாண்ட், கருவாடு உலரும் தளம் மற்றும் படகு அணையும் தளம் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில்,
பழையாறு மீன்பிடித் துறைமுகம் முதன் முதலில் 20 படகுகளுடன் மீன்பிடி தொழிலை தொடங்கியது. தற்போது பழையார் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசை படகுகள், 400 நாட்டுப் படகுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த துறைமுகத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களுக்கு ஒரு முக்கியமான ஜீவாதாரமான தொழிலாக இருந்து வருகிறது.
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்களும் இந்த துறைமுகத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கேரளா, ஆந்திரா, மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது துறைமுகத்தில் மீன் ஏலகூடங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் பழையாறு துறைமுகத்தில் படகுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதால் மீனவர்கள் மழைக் காலங்களில் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
மீனவர்கள் நலன் கருதி பழையாறு துறைமுகம் அருகில் உள்ள பக்கிங் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்க கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே சேதம் அடைந்து காணப்படுகின்ற பழையாறு துறைமுகத்தை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்க வேண்டிய டீசல் கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.