டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குள்ளாகி கைதாகியிருக்கும் நிலையில், இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். முன்னதாக 2021-2022-ம் ஆண்டுக்கான டெல்லி மாநில கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்துமாறு, டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக 11 கலால்துறை அதிகாரிகளை, துணைநிலை ஆளுநர் இடைநீக்கம் செய்திருந்தார்.
இந்த நிலையில் கலால் கொள்கை ஊழல் தொடர்பாக, மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட மொத்தம் 21 இடங்களில் சிபிஐ இன்று ரெய்டு நடத்தியது. சிபிஐ-யின் இந்த ரெய்டுக்கு, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல அமெரிக்க நாளிதழ், டெல்லியின் கல்வி மாடலை பாராட்டி மணீஷ் சிசோடியாவின் படத்தை நாளிதழின் முதல்பக்கத்தில் அச்சிட்டு வெளியிட்ட அதே நாளில், மத்திய அரசு அவரின் வீட்டுக்கு சிபிஐ-யை அனுப்பியிருக்கிறது.
சிபிஐ-யை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் சிபிஐ-யின் ரெய்டுக்கு அவர் முழு ஒத்துழைப்பும் தருவார். கடந்த காலங்களிலும் பல ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்போதும் எதுவும் வெளிவரவில்லை, இப்போதும் எதுவும் வெளிவராது” என அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.
டெல்லியின் கல்வி அமைச்சராக மணீஷ் சிசோடியா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்த துறைகளும் மணீஷ் சிசோடியா வசமே இருக்கின்றன.