பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் சில மாகாணங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளதால், அங்கு பயிர்களும் கருகும் சூழல் ஏற்பட்டதால் சிறப்பு குழுவை சீன அரசு அமைத்துள்ளது.
Recommended Video
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் யாங்சே டெல்டா பகுதிகளில் ஒருவாரத்திற்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவுகிறது.
பருவ நிலை மாறுபாடே இத்தகைய வெப்ப நிலைக்கு காரணம் என்று குறைகூறும் சீன அதிகாரிகள், வறட்சியால் சீனாவின் பல பில்லியன்கள் மதிப்பில் இழப்பும் ஏற்படுவதாக கூறுகிறது.
வறட்சிக்கு என்ன காரணம்?
மத்திய சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள யாங்சேயின் முக்கியமான வெள்ளப் படுகையாக விளங்கும் போயாங் ஏரியே பெருமளவு நீரின்றி வறட்சியடைந்து காணப்படுகிறது. சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான சோங்கிங்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள 34 கவுண்டிகளில் உள்ள 66 ஆறுகள் வறண்டுவிட்டன. நடப்பு ஆண்டு 60 சதவீதம் அளவுக்கு மழை பொய்த்ததே இந்த வறட்சிக்கு காரணம் என்று அங்குள்ள அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். குறிப்பாக பாய்பே நகரில் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியசுக்கு மேலே சென்றது.
அதீத வெப்பம்
இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர். சீனாவில் வெப்ப நிலை அதிகம் உள்ள 10 இடங்களில் சோங்கிங் பிராந்தியம் 6 வது இடத்தை பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு வெப்ப நிலை அதிகமாக இருந்தது. அதீத வெப்பத்தால் சோங்கிங் பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் சில இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், எமெர்ஜென்சி சர்வீஸ் அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மாகாணத்தில் சில பகுதிகளில் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
எரிவாயு சப்ளை ரத்து
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் எரிவாயு சப்ளையும் மறு அறிவிப்பு வரும் ரத்து செய்யப்படுவதாக எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோங்கிங் பிராந்தியத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியால் ஜூலை மாதத்தில் 2.7 பில்லியன் யுவான் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் சீன அரசு தெரிவித்துள்ளது.
26-ம் தேதிக்கு பிறகே குறையும்
சீனாவில் தொடர்ந்து 30 வது நாளாக அதீத வெப்பத்திற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதிக்குப் பிறகே வெப்ப அலையின் தாக்கம் குறையத்தொடங்கும் என்றும் சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் அதாவது 4.4 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் மேலான இடங்களில் 35 சதவீதத்திற்கும் மேல் வெப்ப நிலை நிலவுவதாக சீனா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.