பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என கல்வி அமைச்சர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார். இதற்கு எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக தொடக்கக் கல்வி அமைச்சர் சி.வி.நாகேஷ் கூறும்போது, “பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பயிற்றுவிக்கும் வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட வேண்டும். தேசிய கீதம் பாடாத பள்ளிகளை கண்காணித்து வருகிறோம். அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த கருத்துக்கு எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ, வக்பு வாரியம் உள் ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சி வெளியிட்ட அறிக்கையில், “விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொல்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மதத்தை மாணவர்களிடம் திணிக்கும் செயலாகும். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினால் ரம்ஜான், மிலாது நபியை கொண்டாடவும் அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹிஜாப் தடை மீதான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், “கல்வி நிலையங்களில் மத ரீதியான செயல்பாடுகள் கூடாது” என உத்தரவிட்டது. தற்போது கல்வி அமைச்சர் சி.வி.நாகேஷ் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வலியுறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.