மார்ச் 3, 2002 அன்று கோத்ராவுக்குப் பிந்தைய கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டனர். பில்கிஸ் பானோவும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டார். அவரின் 2 வயதுக் குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிறைத் தண்டனை அனுபவித்துவந்த குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அந்த 11 பேரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சிறை வாசலிலேயே ஆரத்தி எடுக்கப்பட்டு, வெற்றித் திலகமிட்டு, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர். இந்த வீடியோ இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே ராவுல்ஜி, “விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் பிராமணர்கள். பொதுவாகவே பிராமணர்கள் நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள். சிறையிலும் அவர்கள் நடத்தை நன்றாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “குஜராத் அல்லது கதுவாவில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் காவிக் கட்சியின் கொள்கை. சிலரின் சாதியால் அவர்கள் கொடூரமான குற்றம் செய்தாலும் அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க முடியும், மற்றவர்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஆதாரம் இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம். அது தவறாகாது. பில்கிஸ் பானோவை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ‘சன்ஸ்கார்’ (ஆழ் உணர்வு திறன் கொண்ட) பிராமணர்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சர்டிஃபிகேட் தருகிறார்.
இதுதான் பிரதமர் மோடி சுதந்திர தினத்தின்போது பேசிய நாரி சக்தியின் நிகழ்ச்சி நிரல். சாதி அடிப்படையில் `சிறையிலிருந்து வெளியேறு’ என இலவச பாஸ்களை பா.ஜ.க வழங்குகிறது. இதில் குறைந்தபட்சம் கோட்சேயாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டதற்கு, நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.