மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், நான்கு அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள போரிவலியில், 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் மிகவும் பழமையானது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்து வந்தது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தக் கட்டடத்தில் வசித்தவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர். பிறகு, இந்தக் கட்டடம் பாழடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தில் தரைமட்டாகியது. கண்ணிமைக்கும் நேரத்தில் 4 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து சுக்குநூறாகியது. கட்டடம் இடிந்து விழும் போது அப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இருந்தது. இதைப் பார்த்த பொது மக்கள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கட்டடத்தின் இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கின்றனரா என தேடி வருகின்றனர். இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.