புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு (64), கடந்த ஜூலை 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளராக ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. இவர் 1987ம் ஆண்டு ஒடிசா கேடர் இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி ஆவார்.
தற்போது ஒன்றிய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அரசின் அரசுப்பணிக்கு சேர்க்கப்பட்டார். அதற்கு முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராக ராஜேஷ் வர்மா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.