புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் இன்று நடந்த ஆடித் தேரோட்டத்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, சிவசங்கரன், சம்பத் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வீராம்பட்டினம் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.