பல பெரிய ஆடம்பர திருமணங்கள் தலைப்புச் செய்திகளை பிடித்திருக்கிறது. ஆனால் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் நடந்த இந்தத் திருமண வரவேற்பு செலவழிக்கப்பட்ட தொகைக்காக மட்டுமின்றி அழைக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையிலும் செய்திகளை எட்டிப்பிடித்திருக்கிறது .
தொழிலதிபரும் கம்மம் மக்களவையின் முன்னாள் எம்.பி.யுமான பொங்குலேடி சீனிவாச ரெட்டியின் மகள் ஸ்வப்னி ரெட்டியின் திருமண வரவேற்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது இந்த வரவேற்பு நிகழ்வுக்காக ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக திருமணம் கடந்த 12ம் தேதி ஸ்வப்னிக்கு இந்தோனேசியாவின் பாலியில் திருமணம் நடைபெற்றது இதற்காக பாலியில் நடந்த திருமண விழாவிற்கு சிறப்பு விமானங்களில் 500 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த திருமண வரவேற்புக்கு மட்டும் 250 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பும்ரா போல் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மற்றொரு பந்துவீச்சாளர்
பொங்குலேடி சீனிவாச ரெட்டி தனது மகளின் திருமண வரவேற்புக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் விருந்தினர்களை அழைத்திருந்தார். அதற்காக கம்மத்தில் உள்ள எஸ்ஆர் கார்டனில் ஏற்பாடுகளை செய்திருந்தார். சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 கார்கள் நிறுத்தக்கூடிய வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வரவேற்பு அரங்கம் மட்டுமே 30 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் விழா நடைபெறும் இடத்திற்குச் செல்ல புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டது.
இந்த மெகா திருமண வரவேற்பு நிகழ்வுக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் வந்த கூட்டத்தினரை ‘பாகுபலி’ கூட்டம் என்று அழைத்தார்கள். இந்த ஏற்பாடுகளுக்காக ரெட்டி சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கம்மம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழுடன் சுவர் கடிகாரங்களும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
திருமண வரவேற்புக்கு திரளான மக்கள் கூட்டம் வருவார்கள் என்பதால் உணவருந்த மட்டும் சுமார் 25 ஏக்கரில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அரங்கில் சுமார் மூன்று லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வுக்கான சமையல் பொறுப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தலைவர்களுக்கு உணவு பரிமாறி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரபல சமையல் கலைஞர் ஜி.யாதம்மாவால் இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீனிவாச ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி 2014 இல் கம்மம் எம்பி ஆனார். இதன் பிறகு தெலுங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2014-19 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.