இது நம்ம ‘சென்னை’; வரலாறு முக்கியம் அமைச்சரே!

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் சென்னையின் அடையாளமாக செண்ட்ரல் ரயில் நிலையத்தை காட்டுவது வழக்கம். அதையும் தாண்டி சென்னைக்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

சென்னையாம்.. அது எல்லாம் ஒரு ஊரா? என, தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ளவர்கள் தூற்றுவது உண்டு. அதே சமயம் ‘இது நம்ம சென்னை’ என ஆராதிக்கும் சென்னைவாசிகளும் உண்டு.

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாகவே கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனாலும் கூட மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1996 ஜூலை 17 அன்று தான் சென்னை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகில் உள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்ந்து வருகிறது.

அதே சமயம் இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னை சுமார் 382 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்தியாவில் வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் வந்துள்ளனர்.

அப்போது வந்தவாசியை ஆண்டு வந்த தாமல் வெங்கடப்ப நாயக்கரிடம் தற்போது தலைமை செயலகம் அமைந்து இருக்கும் கோட்டை பகுதியை கடந்த 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி கேட்டு பெற்றுள்ளனர்.

இதன் பிறகு, நிலம் வழங்கி உதவிய தாமல் வெங்கடப்ப நாயக்கர் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக அப்பகுதிக்கு, ‘சென்னை பட்டினம்’ என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்து அழைத்துள்ளனர்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றே, அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 1969ம் ஆண்டு தமிழக முதல்வராக அண்ணாதுரை இருந்தபோது மெட்ராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்தார்.

இதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி ‘மெட்ராஸ்’ என்ற பெயர் நீக்கப்பட்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை – Chennai என மாற்றப்பட்டு சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழ் சான்றோர்களுக்கு மெரினா கடற்கரையில் சிலைகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிண்டி கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் உலகத்தரத்திலான மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இதன் மூலம், சென்னையின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவ தொடங்கியதால் தமிழ்நாட்டின் பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தேடி வருவோரை அரவணைத்து சென்னை பாசமிகு அன்னையாகவே திகழ்கிறது.

அதுமட்டும் இல்லாமல் இன்றைக்கு உலகத்தில் இருக்கின்ற 195 நாடுளில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்கள் சென்னையில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கிய சென்னைக்கு மேலும், பெருமை சேர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாளை மற்றும் நாளை மறு நாள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதற்காக நாளை மற்றும் நாளை மறு நாள் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சி நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி சென்னைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சி களைகட்டி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.