இம்பால்: ‛‛நான் ராணுவத்தில் சேர விரும்பி தேர்வு எழுதினேன். ஆனால் தந்தை இறந்தது குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் என் கனவு கைகூடாமல் போனது” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக கூறினார்.
மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். மந்திரிபுக்ரியில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு) தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அசாம் ரைபிள் மற்றும் இந்திய ராணுவத்தின் 57வது மவுண்டேன் பிரிவு வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராஜ்நாத் சிங் தனது சிறுவயது கனவு பற்றியும், ராணுவத்தின் மீது தனக்கு இருந்த ஆசையை பற்றியும் கூறினார். இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தந்தையின் மரணம்
இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது சிறுவயது கதையை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். சிறுவயது முதலே எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதற்கான தேர்விலும் நான் பங்கேற்றேன். எழுத்து தேர்வு எழுதினேன். ஆனால் என் தந்தை இறந்ததாலும், என் குடும்ப சூழல் காரணமாகவும் என்னால் ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.
கடமைப்பட்டு இருக்கும்
ராணுவத்தின் சீருடையை குழந்தைக்கு கொடுத்தாலும் குழந்தைகளின் ஆளுமை என்பது மாறுவதை நாம் பார்க்கலாம். ஏனென்றால் இந்த சீருடையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. இந்தியா-சீனா இடையேயான மோதல் நடந்தது. இதுபற்றிய அனைத்து முழு விபரங்களும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கும், அன்றைய ராணுவ தளபதிக்கும் என்ன நடந்தது என்பது நன்றாக தெரியும். சீனாவை எதிர்த்து நம் ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சல் எனக்கு நன்றாக தெரியும். ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் இந்தியா எப்போதும் கடமைப்பட்டு இருக்கும்.
பெருமையாக உள்ளது
நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். எனது மணிப்பூர் பயணம் திட்டமிடப்பட்டபோது, நான் (இராணுவத் தலைவர்) பாண்டேவிடம் அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57வது மலைப் பிரிவின் துருப்புக்களை சந்திக்க விரும்புகிறேன் என கூறினேன். தற்பாது உங்களை சந்தித்து உள்ளேன். ஒவ்வொரு முறை
ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு பெருமையாக உள்ளது.
மேன்மையான சேவை
டாக்டர்கள், பொறியாளர்கள், பட்டக்கணக்காளர்கள் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்கு பங்களிக்கிறார்கள். இருப்பினும் உங்களின் சேவை என்பது அவர்களை விட மேன்மையானது என நம்புகிறேன். அசாம் ரைபிள்ஸ் பிரிவு என்பது வடகிழக்கு பகுதியின் முக்கிய பாதுகாவலர்கள் என கூற வேண்டும்” என பேசினார்.